December 29, 2018
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில், டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.
இருஅணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது.இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் முரளிவிஜய் மற்றும் கே.எல் ராகுலுக்கு பதில் ஹனுமா விஹாரியும், மயங் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 2 விக்கெட்டையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 106 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது.
இரண்டாவது இன்னிங்சில் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. பும்ராவின் முதல் ஓவரில் பின்ச் (3) அவுட் ஆனார். ஹாரிசை (13) ஜடேஜா வெளியேற்றினார். முகமது ஷமியிடம் கவாஜா (33) சிக்கினார். ஷான் மார்ஷ் (44), மிட்சல் மார்ஷ் (10) நிலைக்கவில்லை. ஹெட்டை (34) இஷாந்த் போல்டாக்கினார். கேப்டன் பெய்ன் (26) ஜடேஜா சுழலில் வீழ்ந்தார். ஸ்டார்க் (18) போல்டாக, கம்மின்ஸ் அரைசதம் அடித்தார்.
இதையடுத்து, நான்காவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து, 141 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஜடேஜா 3, பும்ரா 2, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். இதனால் இந்திய அணிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.