September 11, 2017
tamilsamayam.com
யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், தரவரிசையில் உலகின் நம்பர்-1 வீரரான ரபெல் நடால், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.
போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய நடால், இரண்டாவது செட்டையும் 6–3 என மிகச் சுலபமாக தன்வசப்படுத்தினார்.
பின் நடந்த மூன்றாவது செட்டிலும் நடால் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய ஆண்டர்சன், 4-6 என அந்த செட்டை இழந்தார்.
இதன் மூலம் ஸ்பெயின் நடால், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை 6-3, 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபன் அரங்கில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
16வது பட்டம்:
தென் ஆப்ரிக்காவின் ஆண்டர்சனை வீழ்த்தி யு.எஸ்., ஓபன் பட்டம் வென்ற நடால், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 16வது பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.இப்பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (19 பட்டம்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.