May 10, 2017
tamil.samayam.com
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மேக்ஸ்வெல் ஓரளவு கைகொடுக்க, பஞ்சாப் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மொஹாலியில் நடக்கும் 49வது லீக் போட்டியில், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பிர், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியில் சுவப்னில், ராகுல் திவாதியா, மனன் வோஹ்ரா, மாட் ஹென்ரி இடம் பெற்றனர். கொல்கத்தா அணியில், உத்தப்பா மீண்டும் அணிக்கு திரும்பினார். சாவ்லாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
கவுத்திய கப்டில்:
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் கப்டில் (12) வேஹ்ரா (25) சுமாரான துவக்கம் அளித்தனர். பின் வந்த மார்ஸ் (11) ஏமாற்றினார்.
அசத்தல் ஜோடி:
பின் இணைந்த மேக்ஸ்வெல், சகா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொல்கத்தா பவுலர்களை பதம் பார்த்த மேக்ஸ்வெல் 44 ரன்கள் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த நிலையில் அவுட்டானார். இவருக்கு கம்பெனி கொடுத்த சகாவும் (38) நடையைகட்ட, பஞ்சாப் அணியின் ரன்வேகம் படுத்தது.
கடைசி வரிசை வீரர்கள் தட்டுத்தடுமாற பஞ்சாப் அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.