March 5, 2019 தண்டோரா குழு
கிரிக்கெட் வீரர் தோனியின் காலில் விழுவதற்காக, மைதானத்தில் அத்துமீறி வந்த ரசிகனுக்கு போக்கு காட்டி தோனி ஓடிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதனுடைய முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி இந்தியா வென்று அசத்திய நிலையில், இன்று 2வது ஒருநாள் போட்டி நடைப்பெற்று வருகின்றது. விறுவிறுப்பாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜாதவ் 81*, தோனி 59* ரன் அடித்து வெற்றிக்கு அடியெடுத்து வைத்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைப்பெற்று வருகின்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 250 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக, அதிரடி ஆட்டக்காரரான தோனி இதில் ஒருரன் கூட எடுக்காமல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதையடுத்து, இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பீல்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது, இந்திய அணி வீரர்கள் ஒன்றாக குழுமி இருந்த போது, தோனியின் ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தார்.
மேலும், அவர் தோனியை நெருங்கியதும், தன் ரசிகன் என அறிந்து கொண்ட தோனி, வீரர்களுக்கிடையே வேகமாக ஓடினார். இதனை சுதாரித்துக் கொண்ட ரசிகர், அவரை துரத்தி பின்னாடியே ஓடினார். வளைந்து வளைந்து ஓடிய தோனி கடைசியில் ஸ்டெம்பிற்கு அருகே சென்று நின்று அந்த ரசிகனை கட்டிப் பிடித்தார்.
மைதானத்தில் தோனியின் ரசிகனும், தோனி செய்த குறும்புத் தனமும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.