March 25, 2019 தண்டோரா குழு
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்த 12வது ஐபிஎல் தொடர் கடந்த 23ம் தேதி சென்னையில் துவங்கியது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இத்தொடரின் 4-வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இதில், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. ஐ.பி.எல் தொடரில் இரு அணிகளும் மொத்தம் 17 முறை மோதியுள்ளன. அதில், ராஜஸ்தான் அணி 10 முறையும், பஞ்சாப் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் 5 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சீசனில் பஞ்சாப் அணியில் வருண் சக்கரவர்த்தி, சாம் கரன் மற்றும் நிகோலஸ் பூரான் உள்ளிட்ட அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் உள்ளனர். அதைபோல் ராஜஸ்தான் அணியில் கடந்த சீசனில் 500 ரன்களுக்கு மேல் குவித்த முக்கிய வீரராக ஜோஸ் பட்லர் இருக்கிறார். அதேபோல், தடையில் இருந்து மீண்டு வந்த ஸ்மித் அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.