July 17, 2017
tamilsamayam.com
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 19வது பட்டத்தை வென்ற சாதித்தார் பெடரர்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–5’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், குரோசியாவின் மரின் சிலிக்கை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் அசத்திய பெடரர், முதல் செட்டை, 6-3 என வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய பெடரர், 6-1 என எளிதாக வென்றார்.
சிலிக் காயம்:
பின் மூன்றாவது செட் துவங்கும் முன் சிலிக்கின் பாதத்தில் காயம் ஏற்பட்டதால் சிறிது நேரம் மருத்துவ சிகிச்சைக்கு பின் போட்டியில் சிலிக் தொடர்ந்து பங்கேற்றார். மூன்றாவது செட்டை கைப்பற்ற கடுமையாக போராடிய இவர், ஒரு கட்டத்தில் 3-4 என ஒருகட்டத்தில் பின் தங்கினார். இந்த கேப்பை சரியாக பயன்படுத்திய பெடரர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, அந்த செட்டையும் 6-4 என கைப்பற்றினார்.
முடிவில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 6-3, 6-1, 6-4 என்ற செட்களில் குரோசியாவின் சிலிக்கை வீழ்த்தி, விம்பிள்டன் அரங்கில் 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
8வது பட்டம்:
இதற்கு முன் விம்பிள்டன் அரங்கில் பெடரர், கடந்த 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, என 7 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர, 2014, 2015ம் ஆண்டில் விம்பிள்டன் பட்டம் வெல்லும் வாய்ப்பை செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சிடம் தவறவிட்டார். தற்போது 8வது முறையாக இப்பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.
மொத்தமாக 19:
விம்பிள்டனில் பட்டம் வென்ற பெடரர் ஒட்டுமொத்தமாக கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 19வது பட்டம் வென்று சாதித்தார்.
புது வரலாறு:
மரின் சிலிக்கிற்கு எதிராக வெற்றி பெற்ற ரோஜர் பெடரர் தனது 11வது விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் பங்கேற்றார்.
இதில் வெற்றி பெற்ற பெடரர், விம்பிள்டன் அரங்கில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார். இதன்மூலம், கடந்த 2000ல் பீட் சாம்ப்ராஸ், 1889ல் வில்லியம்ஸ் ரென்ஷாவும் படைத்த சாதனையை முடியடித்தார்.