March 15, 2019 தண்டோரா குழு
சூதாட்டப்புகாரில் சிக்கியதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில் ‘ஸ்பாட் பிக்சிங்கில்’ ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டேலா, அன்கிங் சவான் கைது செய்யப்பட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாததால் இவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது. எனினும், வாழ்நாள் தடையை நீக்க பி.சி.சி.ஐ., மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவைடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், 35 வயதாகும் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பங்கேற்பது குறித்து 3 மாதங்களில் பிசிசிஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில்,
தற்போது, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பிற்கு பி.சி.சி.ஐ., மதிப்பு அளிக்கும் என நம்புகிறேன். நான் கிரிக்கெட் விளையாடி ஆறு ஆண்டு ஆகிவிட்டன. மீண்டும் கிரிக்கெட் களத்தில் பங்கேற்பேன். இனி எங்கு விளையாட விரும்புகிறேனோ, அந்த இடத்தில் விளையாட முடியும். இன்னும் விளையாட வேண்டிய காலம் அதிகமாக உள்ளது. ஸ்காட்லாந்தில் மீண்டும் கிளப் அணிக்காக பங்கேற்க விரும்புகிறேன்,’ இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் கோப்பை வென்றார். எனக்கு 36 வயதுதான் ஆகிறது. எனக் கூறியுள்ளார்.