September 9, 2019 தண்டோரா குழு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்து பல சாதனைகளை படைத்தவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவார். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர் இலங்கை அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரரான கொத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முரளிதரன் எடுத்துள்ளார்.
இந்நிலையில் கொழும்புவில் நேற்று கொத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் முரளிதரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி
மக்களை படுகொலை செய்தனர். விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்கு தோன்றியது அன்றுதான். இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் அடுத்ததாக அதிபராக ஆட்சிக்கு வர வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்” என்று பேசியுள்ளார்.
முரளிதரன் இப்படி பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.