May 18, 2017
தண்டோரா குழு
ரியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை தீபா மாலிக், தனது அனுபவங்களை டைம்ஸ் இண்டர்நெட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட போது, தனது நீண்ட நாள் கனவு நிறைவேறும் என தீபாமாலிக் நினைக்கவில்லை. ஆனால் தன் மீது சுமத்தப்பட்டிருந்த அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றுதான் அவர் உறுதி கொண்டிருந்தார்.
ஆனால் தன் மீது சுமத்தப்பட்டிருந்த வீண் பழியை துடைத்தது மட்டுமின்றி, குண்டு எரிதலில் வெள்ளிப் பதக்கம் வென்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் தீபாமாலிக் பெற்றார்.
டைம்ஸ் இண்டர்நெட் நிறுவனத்திற்கு நேற்று பிரத்யேக பேட்டியளித்த தீபாமாலிக், தன்னுடைய குறிக்கோள், அதற்கான அர்ப்பணிப்பு உணர்வு,கடும் உழைப்பு குறித்த அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். உடற் குறைபாட்டினால் ஒருவர் சோர்ந்து போவதில்லை என்பதை தனது பேச்சு முழுவதும் அவர் உணர்த்திக் கொண்டே இருந்தார்.
எப்போதுமே உங்கள் எண்ணங்களை பாசிட்டிவாக வைத்திருங்கள். அதற்கேற்றவாறு உங்கள் மூளையை தயார் செய்யுங்கள். தீர்வுகளை தேடுங்கள்.வாழ்க்கை ஒரு திருவிழா போல. அதனை தினந்தோறும் கொண்டாடிக் கொண்டே இருங்கள். எல்லா வெற்றிகளுமே சிறிய புள்ளியில்தான் துவங்குகின்றன.” என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார் தீபாமாலிக்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழலுக்கு தீபாமாலிக் தள்ளப்பட்டாலும், தன்னுடைய விடா முயற்சியால் இந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவருடைய 6-வது வயதில்,அவரின் முதுகுத் தண்டில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகளில் பல பாதிப்புகள் ஏற்பட்டன. பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு , தனது 20-வது வயதில்தான் அவர் முற்றிலும் குணமடைந்தார். ஆனால் மீண்டும் அவர் வாழ்க்கையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு விதி விளையாடியது.
”30 வயதை தொடும் நிலையில்,என் உடலின் கீழ் பகுதியில் சோர்வை உணர்ந்தேன். மருத்துவ சோதனையில் முதுகுத்தண்டில் மீண்டும் அந்த கட்டிகள் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பத்து நாட்களுக்கு நடப்பதை கொண்டாடிக் கொள்ளுங்கள் என மருத்துவர்கள் எனக்கு அவகாசம் கொடுத்தார்கள். அந்த கட்டியினால் நிரந்தரமாக நடக்க முடியாமல் கூட போகலாம் எனவும் எனக்கு கூறப்பட்டது. அதே போலவும் நடந்தது.” என தீபாமாலிக் தன் வாழ்வின் கருப்பு பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.
உடலில் குறைபாடு ஏற்பட்டு விட்டாலும், விளையாட்டின் மீது தீபாமாலிக்கிற்கு இருந்த காதல் மட்டும் குறையவே இல்லை. திருமணம் செய்து கொண்ட கணவரிடமிருந்து தீபாமாலிக்கிற்கு நம்பிக்கை வார்த்தைகள் கிடைக்கவில்லை. மாறாக ஒரு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் மட்டுமே கிடைத்தது.
”எனக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. பலரும் அவர்களது வார்த்தைகளினால், என்னை தோல்வியில் துவளச் செய்தார்கள். ஆனாலும் நான் என் முயற்சியை கைவிடவில்லை. பலரும் எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக நினைத்தார்கள்.” என தீபாமாலிக் தனது வலிகளை சிரித்துக் கொண்டே நினைவு கூறுகிறார்.
ஆனால் எவ்வளவு பாடுகள் பட்டாலும், தன் குறிக்கோளில் உறுதியாக இருந்த தீபாமாலிக் தனது 46-வது வயதில் ரியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதித்தார். அப்போது ஒரு காலத்தில் அவரை ஏளனமாக பார்த்தவர்களின் வாயிலிருந்து வாழ்த்துக்கள் மட்டுமே வந்தன.