March 20, 2019 தண்டோரா குழு
இந்தியன் சூப்பர் லீக் டி20 தொடருக்கான லீக் சுற்று அட்டவணை விவரம் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் வரும் மார்ச் 23ல் துவங்குகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன், விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. ஏப்ரல் – மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அதற்கேற்ப போட்டி அட்டவணை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், கடந்த மாதம் முதல் கட்டமாக 17 லீக் ஆட்டங்களுக்கான விவரம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக அனைத்து லீக் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஐபிஎல் தொடரின் 12வது சீசன் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களின் உள்ளூர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களை விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறைக்கு கிரிக்கெட் வாரியம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். லீக் சுற்றுக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளோம். பிளே ஆப், பைனலுக்கான விவரமும் விரைவில் வெளியாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் களமிறங்கும் 8 அணிகளும் உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. இந்த சுற்று மே 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 56 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் மோத உள்ளன. குவாலிபயர் 1, எலிமினேட்டர், குவாலிபயர் 2 ஆட்டங்களின் முடிவில் இறுதிப் போட்டியில் மோத உள்ள அணிகள் முடிவு செய்யப்படும்.பிளே ஆப் சுற்று மற்றும் பைனலுக்கான விவரம் பின்னர் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் சென்னையில் வரும் மே 12ல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., தொடரின் ஃபைனல் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதேபோல நாக் அவுட் போட்டியின் முதல் குவாலிபயர் போட்டி வரும் மே 7 ம் தேதியும், எலிமினேட்டர் போட்டி மே 8ம் தேதியும், மே 10ம் தேதி இரண்டாவது குவாலிபயர் போட்டியும் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.