October 28, 2017
tamilsamayam.com
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் கோப்பைக்காக இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இதில், இந்திய அணி லீக் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டது.
இருப்பினும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் தொடர்ந்த இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் சம பலத்துடன் வலுவான அணிகளாக உள்ளன.
கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 8 பணிக்குத் தொடங்குகிறது. நான்கு முறை இத்தொடரில் பங்கேற்று முதல் தடவையாக இறுதிக்குத் தகுதி பெற்ற இங்கிலாந்து அணி கோப்பையுடன் நாடு திரும்ப விரும்புகிறது. ஆனால், மூன்று முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றும் கோப்பையை கோட்டைவிட்ட ஸ்பெயின் இங்கிலாந்தை நசுக்கி மகுடம் சூட ஆர்வமாக உள்ளது.
ஆனால், இத்தொடரில் ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்காத இங்கிலாந்து அணியை ஸ்பெயின் அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது. இதுவரை அந்த அணி வீரர்கள் மொத்தம் 18 கோல்கள் போட்டு மிரட்டியுள்ளனர்.முன்னதாக, மாலை 5 மணிக்கு நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரேசில் மற்றும் மாலி அணிகள் மோதுகின்றன.