October 26, 2017
tamil.samayam.com
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட எச்.எஸ். பிரனோய், சாய் பிரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோய், கொரியாவின் லீ ஹியூனை எதிர்த்து விளையாடினார்.
இப்போட்டியில் 21-15, 21-19 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார்.
இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் – தாய்லாந்து வீரர் கோசித் பெட்பிரதாப் பலப்பரீட்சை செய்தனர். இப்போட்டியில், சாய் பிரனீத் 21-13, 21-23, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார்
இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் – ஜெர்மனி வீரர் பேபியன் ரோத் இடையேயான மற்றொரு முதல் சுற்று போட்டியிலிருந்து பேபியன் ரோத் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், டென்மார்கின் லைன் ஜார்ஸ்ஃபெல்டை எதிர்கொண்டார். இப்போடியில் 21-14, 11-21, 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து – ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரல்ஸ் ஆகியோர் மோதினர். இப்போட்டியில் 21-19, 21-18 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.