November 30, 2018
தண்டோரா குழு
ஆஸ்திரேலியா அணியுடனான பயிற்சி போட்டியின் போது பிருத்வி ஷாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள்,நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.ஏற்கனவே இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6ந் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
இதற்கிடையில்,இரு அணிகள் இடையேயான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு துவங்கியது.இப்போட்டியில் 69 பந்துகளை எதிர்கொண்ட பிரித்வி ஷா,11 பவுண்டரிகளுடன் 66 ரன்களை குவித்தார்.
இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தின் பீல்டிங்கின் போது பவுண்டரி லைனில் நின்றிருந்த ப்ரிதீவ் ஷா தன்னை தாண்டி பவுண்டரி லைனிற்குள் சென்ற பந்தை கேட்சை பிடிக்க முயற்சிபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது கணுக்காலில் காயம் அடைந்து வேதனையில் துடித்தார். இதையடுத்து, உடனடியாக மருத்துவ குழுவினரின் உதவியுடன் மைதானத்தை விட்டு பிரித்வி ஷா வெளியேறினார்.
ப்ரிதீவ் ஷாவிற்கு முதலுதவி அளித்த பின்னர் அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்வதற்காக அனுப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ., தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.ஸ்கேன் ரிப்போர்ட் வந்தபிறகு தான் ப்ரிதீவ் ஷாவிற்கு ஏற்பட்டுள்ள காயத்தின் நிலை குறித்தும்,அவர் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவாரா என்பது தெரிய வரும்.