September 8, 2018
தண்டோரா குழு
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் நிதானமாக ஆடினார்கள். ஜென்னிங்ஸ் 23 ரன்களிலும்,அலஸ்டர் குக் 71ரன்களிலும் வெளியேறினார்கள்.
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ரூட்(0),பரிஸ்டோ(0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.அவர்களைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார்.சிறப்பாக விளையாடிய மொயின் அலி(50) தனது அரை சதத்தினை பதிவு செய்தார்.இறுதியில் ஜோஸ் பட்லர் 11 ரன்களும்,ரஷித் 4 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது.இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.