September 11, 2018
தண்டோரா குழு
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 464 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 331 ரன்கள் சேர்த்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட் ஆனது.40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.இதில் சிறப்பாக விளையாடிய அலஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்சில் சதம் அடித்தார்.அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார்.
இந்நிலையில் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து,இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் ஒரு ரன்னிலும்,புஜாரா ரன் ஏதும் அடிக்காமலும் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி பிராட் வீசிய 3-வது ஓவரில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.இதனால் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.இறுதியில் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் இழந்து 58 ரன்கள் அடித்திருந்தது.