January 24, 2017
tamilsamayam.com
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் நீச்சல் வீரர் பினோத் சிங் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் பினோத் சிங் இந்தியா சார்பாக பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். இவர் திடீரென மாயமானதைத் தொடர்ந்து இவரது தந்தை சச்சிவாலயா காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தன் மகன் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும் காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதால் அவர்களே தன் மகனைக் கடத்திச்சென்று கொன்றிருக்கலாம் என்றும் தன் புகாரில் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பாகல்பூர் மாவட்டத்தின் லசோ என்ற கிராமத்தில் பழத்தோட்டம் ஒன்றில் பினோத் சிங் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உடலைக் கைப்பற்றிய காவல்துறை இறந்தது பினோத் சிங் தான் என்பதை உறுதிசெய்துள்ளது.
இறந்த பினோத் உடலில் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடங்கள் இருக்கின்றன என்றும் நான்கைந்து நாட்களுக்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
அடுத்த கட்ட விசாரணைக்காக பினோத் சிங்கின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.