October 25, 2018
தண்டோரா குழு
மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ (Dwayne Bravo) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் டுவைன் பிராவோ.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார்.பிராவோ தனது 14 ஆண்டு கிரிக்கெட் பயணத்தில் 40 டெஸ்ட் போட்டிகளிலும்,164 ஒருநாள் போட்டிகளிலும்,64 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.ஆனால், அவர் வெஸ்ட் இண்டீஸுக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கடைசியாக விளையாடினார்.அதைபோல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இந்திய ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.இந்நிலையில்,பிராவோ (Dwayne Bravo) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை கிரிக்கெட் உலகுக்கு நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்புகிறேன். முதன் முதலாக,கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நான் நுழைந்தபோது எனக்கு பிரவுன் நிற தொப்பி அணிவிக்கப்பட்டது.14 ஆண்டுகளுக்குப் பிறகு அதை நினைத்துப் பார்க்கிறேன்.எனினும்,அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.எனது வெற்றிக்கு ஆதரவாக இருந்து எண்ணற்ற ரசிகர்கள்,எனது குடும்பத்தினர்,சிறு வயதில் எனக்குப் பயிற்சி கிரிக்கெட் சங்கத்தினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”.இவ்வாறு கூறியுள்ளார்.