August 11, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.ஆனால் போட்டி நடைப்பெற இருந்த லண்டன்,லார்ட்ஸ் மைதானம் பகுதியில் காலை முதல் மழை பெய்து வந்ததால் நடுவர்கள் முதல் நாள் போட்டியை கைவிடப்படுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து,இரண்டாவது நாளான நேற்று போட்டி தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனைத்தொடர்ந்து,தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களம் இறங்கினர்.முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் முரளி விஜய்(0) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார்.
பின்னர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஏழாவது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.அவ்வப்போது மழை குறுக்கிட்ட நிலையில்,மைதானத்தில் பந்து அதிகமாக ஸ்விங் ஆனதால் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்களில் சுருண்டது.
இந்திய அணி சார்பில் அஸ்வின் மட்டுமே அதிகபட்சமாக 29 ரன்களை எடுத்தார்.இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 13.2 ஓவர்கள் வீசி 5 மெய்டன்கள் 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.