November 21, 2017
tamilsamayam.com
ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நாக்ஸ்வில் நகரில் நடைபெற்றது. இத்தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா இணை தென் ஆப்ரிக்காவின் ருயன் மற்றும் பிரிட்டனின் ஜோ ஷாலிஸ்பரி இணையை எதிர்கொண்டது.
இதில் முதல் செட்டை பயஸ் ஜோடி 6–3 எனக் கைப்பற்றியது. பரபரப்பாகத் தொடர்ந்த அடுத்த செட்டை 6–7 என தவறவிட்டது. மீண்டும் உத்வேகம் பெற்று மிரட்டிய பயஸ் ஜோடி கடைசி செட்டை 10–5 வென்றது. ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் வரை இந்த ஆட்டம் நீடித்தது.
இறுதியில், பயஸ் – புரவ் இணை 6–3, 6–7, 10–5 என்ற செட் கணக்கில் வென்று கோப்பை தனதாக்கியது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இத்தொடரில் பட்டம் வென்ற சாதனையையும் இந்திய இணை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆண்டில் பயஸ் வென்ற 5வது ஏ.டி.பி., தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.