November 2, 2018
தண்டோரா குழு
பாகிஸ்தான் அணி கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் அசார் அலி. சில காலம் அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்திய இறுதிப் போட்டியில் அசார் அலி முக்கியமான 59 ரன்களை எடுத்தார்.இதே சாம்பியன்ஸ் டிராபி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 50 ரன்களையும்,இங்கிலாந்துக்கு எதிராக 76 ரன்களையும் எடுத்தார் அசார் அலி.இதுவரை 53 போட்டிகள் விளையாடியுள்ள அசார் அலி,1845 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் 12 அரைசதங்கள் அடங்கும்.
இந்த ஆண்டு நியூசிலாந்து தொடருக்குப் பிறகே அசார் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டு இவருக்குப் பதிலாக இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில்,அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“நான் திடீரெனதான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.ஆனால் நான் எந்த ஒரு கசப்பான எண்ணங்களுடனும் ஓய்வு அறிவிக்கவில்லை.இது என் சொந்த முடிவு. பாகிஸ்தான் அணியில் ஒருநாள் போட்டிகளுக்கு அபாரமான வீரர்கள் ஆடி வருகின்றனர்.ஆகவே என் தேவை இருக்காது.டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த விரும்புகிறேன்.டெஸ்ட் போட்டிகளில் இதே ஆற்றல்,திறமையுடன் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புகிறேன்.அடுத்த உலகக்கோப்பை மற்றும் வரவிருக்கும் தொடர்களுக்காக பாகிஸ்தான் அணி வெற்றி பெற ஒரு முன்னாள் கேப்டனாக வாழ்த்துகிறேன்.சர்பராஸ் அகமட் அணியை நன்றாகவே வழிநடத்துகிறார்.”எனக் கூறியுள்ளார்.