January 6, 2017 tamil.samayam.com
கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருப்பது சரியான முடிவு என்று கிரிக்கெட் முன்னாள் நட்சத்திரம் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி, ”கேப்டன் பதவியில் இருந்து விலகியது தோனியின் சரியான முடிவு. தோனியால் வரும் 2019 உலக கோப்பை வரையில் சிறப்பாக விளையாட முடியும். தற்போதும் தோனி சிறப்பான ஆட்டக்காரராக உள்ளார். அவரை ஊக்குவிக்கலாம்.
குறிப்பாக அவரது ஒரு நாள் கிரிக்கெட் நம்மை பேச வைத்தது. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான கேப்டனாக விளங்கியுள்ளார். எதிர்காலம் மற்றும் இந்திய அணியின் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தோனி என்ற வார்த்தை இளைஞர்களை கிறங்க வைத்தது. அவர் லாவகமாக ஒவ்வொரு பந்தையும் சூறையாடிய விதம், தலையில் தொங்கும் முடியுடன் களத்தில் இறங்கும் தோனி எதிரிகளை அதிர வைப்பார். ரசிகர்களுக்கு ஆனந்தம் அளிப்பார்.
அதிரடியாக ஆடி வந்தவரின் ஆட்டம் கடந்த சில ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்டு வந்தது. மறுபக்கம் விராட் கோலியின் எழுச்சி இவரது ஆட்டத்தை தோல்வியை ஒப்புக் கொள்ள வைத்தது. மேலும், தோனி விலகுவதற்கான நெருக்கடியை அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று, இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். அவரது திடீர் முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் இங்கிலாந்து – இந்தியாஅணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அதன் பிறகு மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வுக்குழு ஜனவரி 6ல் கூடும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி தலைமையில் இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் தோனியின் இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.