April 24, 2017
tamilsamayam.com
டோக்கியோவில் வரும் 2020ல் நடக்கவுள்ள பாராலிம்பிக் நீச்சலில் தங்கப்பதக்கம் கைப்பற்றுவேன் என கண்பார்வையற்ற நீச்சல் வீராங்கனை காஞ்சனமாலா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த அமராவதி பகுதியில் பிறந்தவர் காஞ்சனமாலா பாண்டே. கண்பார்வை தெரியாத இவர், தனது 10 வயது முதலில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதுவரை சர்வதேச அளவில் உட்பட இவர் 110 பதக்கங்களை நீச்சல் போட்டிகளில் பங்கேற்று குவித்துள்ளார்.
அதில் கடந்த 2006ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 6 பதக்கம், ஆசிய போட்டிகளில் 9 பதக்கம், 50 மாநில அளவிலான பதக்கங்களும் அடங்கும். இவர் தற்போது 2020ல் ஜப்பானின் டோக்கியோவில் நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சனமாலா கூறுகையில்,
“மற்ற நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கு அடியில் செல்லும் போது தெளிவாக பார்க்க, கூகிள் கண்ணாடிக்களை பயன்படுத்துவார்கள். ஆனால் எனக்கு பிறவியில் இருந்தே கண் பார்வை கிடையாது. தண்ணீருக்குள் சென்ற பின் என்னால் பார்க்க முடியாது என்பதால், அருகில் நீந்தும் சக போட்டியாளர்களின் நீச்சல் சத்தத்தை பின் தொடர்ந்து முந்துவேன். இதே உக்தியை பயன்படுத்தி பாராலிம்பிக், மற்றும் ஆசிய போட்டிகளிலும் சாதிப்பேன்,” என்றார்.