May 29, 2017
tamilsamayam.com
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி போட்டியிலும், மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்து அசத்தினார் தோனி.
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன.
இத்தொடரின் லீக் போட்டிகளுக்கு முன், இந்திய அணி பயிற்சி போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் ’டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 38.4 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 26 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோலி (52), தோனி (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். தவிர, டி.ஆர்.எஸ்., முறைப்படி, இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோமே, இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா பந்தில் சிக்சர் அடிக்க முயற்சிக்க, பந்தை தவறவிட்டார். ஆனால், இதை கனக்கச்சிதமாக பிடித்த தோனி, கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங் செய்தார்.
பயிற்சி போட்டியாக இருந்தாலும், லேசாக எடுத்துக்கொள்ளாமல், அதிலும் சிறப்பாக செயல்பட்ட தோனியின் வேகத்தை சக வீரர்கள் பாராட்டினர். தவிர, தோனியின் இந்த செயல்பாட்டை, அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.