August 1, 2018
தண்டோரா குழு
பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இத்தாலி அணியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.இதில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன.ஒவ்வொரு பிரிவிற்கும் நான்கு அணிகள் வீதம் மொத்தம் 4 பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய போட்டி டிரா ஆனது.2வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் மோதிய இந்திய அணி தோல்வியை தழுவியது.இதனால் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலை உருவானது.
இந்நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதிய இந்திய அணி 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை டிரா செய்தது.இதன் காரணமாக ஃபிளே ஆஃப் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.
இதனையடுத்து ஃபிளே ஆஃப் சுற்றில் நேற்று இத்தாலியை எதிர்கொண்ட இந்திய அணி ஆரம்பம் முதலே ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 9வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி முதல் கோல் அடித்தார்.
அதை தொடர்ந்து த நேஹா கோயல்,இந்தியாவிற்கான இரண்டாவது கோலை அடித்தார்.பிறகு ஆட்டத்தின் இறுதி நேரத்தில் கிடைத்த இரண்டாவது பெனாலிட்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வந்தனா கட்டாரியா மூன்றாவது கோலை அடித்து,இந்தியாவிற்கான வெற்றியை உறுதி செய்தார்.இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.