December 15, 2018 findmytemple.com
சுவாமி : ஐராவதேஸ்வரர்.
அம்பாள் : தெய்வநாயகி.
தீர்த்தம் : எமதீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு :
முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை, 2-ம் ராஜராஜனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலும் பெற்றுள்ளது. 1987-ல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2004-ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும், ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன என்பது மேலும் சிறப்பு ஆகும்.
தல வரலாறு :
தாரன் எனும் அரசன் தனது 100 மனைவிகளுடன் வணங்கி சிறப்புற வாழ்ந்த திருத்தலம். ஐராவதம் எனும் வெண்யானை துர்வாசர் சாபத்தால் இழந்து விட்ட வெண்மையை இச்சிவனை வணங்கி மீளப் பெற்றதிருத்தலம். ஸ்ரீ ஐராவதேஸ்வரர் என்னும் திருநாமத்தில் சிவபெருமான் திருக்கோவில் கொண்டுள்ளார். இத்திருக்கோவிலை ராஜேந்திரச் சோழன் 12-ம் நூற்றாண்டில் கட்டினார். சோழர்களின் கட்டிடக் கலைக்கு மிகப் பெரிய உதாரணமான கோவில். திருக்கோவிலின் முன்பு மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள தூண்களின் சிற்பங்களை காண கண் கோடி வேண்டும். இங்குள்ள இறைவனை இந்திரனின் ஐராவதமும், எமதர்ம ராஜாவும் வழிபட்டு உள்ளதாக புராணம் கூறுகிறது. இங்குள்ள திருக்குளத்தின் பெயர் எமதீர்த்தமாகும்.
சோழ மன்னன் இரண்டாம் இராஜராஜன் (1150-1173) இக்கோவிலை எழுப்பினார். இம்மன்னர் பெயரால் இக்கோவில் இராஜராஜேச்சுரம் என அழைக்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலின் சில பகுதிகள் எழுந்தன. ஐராவதேஸ்வரர் கோவில் பிற்காலச் சோழர் காலச் சிற்பக் கலைத் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இக்கோவிலின் விமானம் தஞ்சையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் உள்ள கோவில்களைப் போல் பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்டுள்ளது. இக்கோவில் முழுவதும் கல்லாலானது. இரண்டாம் இராஜராஜன் சாளுக்கியரின் கல்யாணிநகர் மீது படை எடுத்து வெற்றி பெற்றார். தமது பரிசாக அங்கிருந்து சாளுக்கிய துவார பாலகர் சிலையைத் தாராசுரம் கோவிலுக்குக் கொண்டு வந்தார். துவார பாலர் சிற்பமும் இதர சில சிற்பங்களும் தற்பொழுது தஞ்சாவூர் சரஸ்வதி மாளிகையில் உள்ள கலைக் கூடத்தில் உள்ளன. ஐராவதேஸ்வரர் கோவிலில் காணப்படும் சில சிற்பங்கள் கல்யாணிச் சாளுக்கியர் கலையின் அம்சங்களைக் கொண்டுள்ளன.
கோவிலின் கட்டடகலை :
கோனார்க் பாணி வடிவமைப்பு – ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும். ஐராவதேஸ்வரர் கோயில் கோனார்க் கோயிலை ஒத்துள்ளது. ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வது போல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்று வரை இந்தியக் கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ராஜகம்பீர மண்டபத்தின் தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. அதோடு நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டி மீட்டர் அளவிலேயே இங்கு மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. யானையா, காளையா என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஒரு அழகியச் சிற்பத்தை அந்தக் காலத்திலேயே வடிவமைத்து இருக்கிறார்கள் கலை வல்லுனர்கள். 63 நாயன்மார்கள் சிலையும் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளன.
இராமாயண காட்சி வாலியும், சுக்ரீவனும் போர் புரிய, மறைந்து இருந்து சுக்ரீவன் மீது அம்பு எய்தும் ராமர், கையில் வீணை இல்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், மூன்று முகங்கள் மற்றும் எட்டுக் கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இசைப்படிகள் :
நந்தியின் அருகே அமையப் பெற்று இருக்கும் பலி பீடத்தின் படிகள், இசை ஒலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெவ்வேறு பகுதிகளில் தட்டும்போது “சரிகமபதநி” என்ற சப்த ஸ்வரங்களும் ஒலிக்கின்றன.
வழிபட்டோர் : இந்திரனின் ஐராவதம், எமதர்ம ராஜா.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு ஐராவதேஸ்வரர் கலைக்கோவில்,தாராசுரம் – 612 702, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.