July 10, 2017 findmytemple.com
சுவாமி : அருள்மிகு சங்கரநாராயணசுவாமி, அருள்மிகு சங்கரலிங்க சுவாமி.
அம்பாள் : அருள்தரும் கோமதி அம்மன்.
தீர்த்தம் : நாகசுனை.
தலவிருட்சம் : புன்னை மரம்.
தலச்சிறப்பு :
பாண்டிய நாட்டு பஞ்ச தலங்களில் இது பிருதிவிதலம் ( மண் தலம் ). இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மார்ச் மாதம் 21, 22, 23, ஆகிய நாட்களிலும், செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் சூரியன் உதிக்கும் போது, அதன் ஒளி சங்கரலிங்கர் மீது விழுவதை இன்றும் காணலாம். சூரிய பகவான் சங்கரலிங்கரை இந்நாட்களில் வழிபட்டு வருகிறார் என்று தல புராணம் கூறுகிறது.
தல வரலாறு :
சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் அடிக்கடி சிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். அதனால் ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.
நடைதிறப்பு :
காலை 5.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் :
இத்திருக்கோயிலில் காமிக ஆகமப்படியமைந்து பூசைகளும் அதன்படி நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஏழு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அவையாவன :
திருவனந்தல் – காலை 6.00 மணி,
விளாபூசை – காலை 6.30 மணி,
சிறுகாலசந்தி – காலை 8.30 மணி,
காலசந்தி – காலை 10.30 மணி,
உச்சிக்கால சந்தி – காலை 12.30 மணி,
சாயரட்சை – மாலை 5.30 மணி,
அர்த்த சாமம் – இரவு 9.00 மணி.
திருவிழாக்கள் :
ஆடிமாதம் ஆடித்தவசு திருவிழா 15 நாட்கள் (ஆடித்தவசு திருவிழா சித்திரை பிரமோற்சவ திருவிழாவின் 9-ம் நாளன்று அம்பாள் திருத்தேரோட்டமும் நடைபெறும்),
புரட்டாசி நவராத்திரி திருவிழா 9 நாட்கள்,
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள்,
மார்கழி திருவெம்பாவை திருவிழா 10 நாட்கள்,
சித்திரை பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள்,
ஐப்பசி சஷ்டி 7 நாட்கள்,
தை தெப்பத் திருவிழா 3 நாட்கள் (தை மாதாந்திர வெள்ளிக்கிழமை அன்று தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது).
அருகிலுள்ள நகரம் : ராஜபாளையம்.
கோயில் முகவரி : அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில்,சங்கரன்கோவில் – 627 756, திருநெல்வேலி மாவட்டம்.