February 12, 2019 www.findmytemple.com
சுவாமி : செந்திலாண்டவர்(அ) சுப்பிரமணியசுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தலவிருட்சம் : சரவணபொய்கை
தலச்சிறப்பு : முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் ,கடற்கரையில் அமைந்துள்ள ஒரே வீடு இக்கோவிலாகும். இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்க்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.நாழிக்கிணறு சிறப்பு: ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.
தல வரலாறு : இங்குதான் முருகன் சூரபத்மனோடு போரிட்டு, வென்று, வெற்றிக் கொடியான சேவல் கொடியுடனும், பார்வதி தேவி அளித்த வேலுடனும் மயில் வாகனத்தில் அருள் பாலிக்கிறார். முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இப்பகுதியில் வாழ்ந்த அவர்களது வாரிசுகள் தமிழகத்தின் பல பகுதிக்கு குடிபெயர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது.
திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.
சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.
போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.
பாடியோர் : அருணகிரிநாதர்
நடைதிறப்பு : காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் : பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி
கோயில் முகவரி : அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் – 628 205 தூத்துக்குடி மாவட்டம்.