June 1, 2017 findmytemple.com
சுவாமி : மகாலட்சுமீசர், லக்ஷ்மிபுரீஸ்வரர், மகாலட்சுமிநாதர்.
அம்பாள் : லோகநாயகி.
மூர்த்தி : செல்வப் பிள்ளையார், சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி.
தீர்த்தம் : நீலதீர்த்தம்(மகாலக்ஷ்மி தீர்த்தம் எனவும் அழைக்கப்படும்).
தலவிருட்சம் : விளாமரம்.
தலச்சிறப்பு :
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் 19வது சிவத்தலமாகும். மூவர் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் திருநின்றியூர் லக்ஷ்மிபுரீசுவரர் திருக்கோவிலும் ஒன்று. இத்தலம் 3 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.
கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தியும், கொடிமரத்து விநாயகரும் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதி அமைந்துள்ளது. அடுத்து பரசுராமர் வழிபட்ட சிவலிங்கம், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதி அடுத்து பைரவர், சந்திரன் ஒரே சந்நிதியில் உள்ளனர். துவார விநாயகர், தண்டபாணி, துவாரபாலகர்களை வழிபட்டு, உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி, வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது.
இக்கோயிலைச் சுற்றி மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். இத்தலத்து தீர்த்தத்தை “நீலமலர் பொய்கை” என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியுள்ளார். முன்னொரு காலத்தில் இத்தலம் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்யும் போது இப்போதுள்ள அமைப்பில் கோவிலை மாற்றிக் கட்டியதாக கூறப்படுகிறது. தீப்பந்தம் திரி நின்ற ஊர் ஆனதால் இத்தலம் திரிநின்றஊர் என்ற பெயர் பெற்று தற்போது மருவி திருநின்றியூர் என்று அழைக்கப்படுகிறது.
தல வரலாறு :
பரசுராமர் தன்னுடைய தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயார் ரேணுகாவைக் கொன்றார். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தல இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். ஜமதக்னி முனிவரும் தான் செய்த செயலுக்காக வருந்தி இத்தல இறைவனை வழிபட்டார்.
பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கம் என்ற திருநாமத்துடனும் ஜமதக்னி முனிவர் வழிபட்ட சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் காட்சியளிக்கிறார்கள். அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதால் இத்தலத்து இறைவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்திரன், அகத்தியர், பரசுராமர், ஐராவதம், பசு, சோழ மன்னன் அனைவரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபெற்றவர்கள் ஆவர்.
சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை வழிபடும் வழக்கம் உடையவன். அதன்படி மன்னன் தினமும் தனது படைகளுடன் இத்தலம் இருக்கும் காட்டு வழியே தான் செல்வான். தினமும் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து விடும். இந்த எல்லையைத் தாண்டியவுடன் தீப்பந்தங்கள் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இதே போல் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்றது.அதற்கான காரணத்தை மன்னனால் கண்டறிய முடியவில்லை. பின்பு ஒரு நாள் காட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடையனிடம் இவ்விடத்தில் ஏதேனும் விசேஷம் உள்ளதா என மன்னன் வினவினான். இடையன் பசுக்கள் இங்கு ஓரிடத்தில் தானாகவே பாலை கறப்பதைக் கண்டதாகக் கூறினான்.
மன்னன் இடையன் குறிப்பிட்ட இடத்தில் நிலத்தைக் கோடாரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது. பின்பு மன்னன் ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அதன் பாணத்தின் மேல் பகுதியில் கோடாரி பட்டு இரத்தம் வருவதையும் கண்டு அதிர்ந்தான். அப்போது அசரீரி மூலம் இறைவன் தான் இருக்கும் இவ்விடத்தில் கோவில் கட்டுமாறு கூறினார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் கோவிலைக் கட்டி வழிபட்டான் என்பது தல வரலாறு. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைக் காணலாம். இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறார்.
வழிபட்டோர் : இலக்குமி, பரசுராமர், அகத்தியர் இந்திரன், ஐராவதம், பசு, சோழ மன்னன்.
பாடியோர் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை. 4.00 மணி முதல் – இரவு 7.30 மணி வரை.
திருவிழாக்கள் : ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.
அருகிலுள்ள நகரம் : நாகப்பட்டினம் மாவட்டம்.
கோவில் முகவரி : அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில்,குறுமாணக்குடி, திருநின்றியூர் & அஞ்சல் – 609 118 மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.