April 17, 2018
findmytemple.com
சுவாமி : மகாலட்சுமீசர், லக்ஷ்மிபுரீஸ்வரர், மகாலட்சுமிநாதர்.
அம்பாள் : லோகநாயகி.
மூர்த்தி : செல்வப் பிள்ளையார், சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி.
தீர்த்தம் : நீலதீர்த்தம்(மகாலக்ஷ்மி தீர்த்தம் எனவும் அழைக்கப்படும்).
தலவிருட்சம் : விளாமரம்.
தலச்சிறப்பு : தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் 19வது சிவத்தலமாகும். மூவர் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் திருநின்றியூர் லக்ஷ்மிபுரீசுவரர் திருக்கோவிலும் ஒன்று.இத்தலம் 3 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.
கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது.கொடிமரம் இல்லை. பலிபீடமும்,நந்தியும்,கொடிமரத்து விநாயகரும் உள்ளது.வெளிப்பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதி அமைந்துள்ளது.அடுத்து பரசுராமர் வழிபட்ட சிவலிங்கம்,வள்ளி,தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர்,நால்வர்,மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன.
நவக்கிரக சந்நிதி அடுத்து பைரவர்,சந்திரன் ஒரே சந்நிதியில் உள்ளனர்.துவார விநாயகர்,தண்டபாணி,துவாரபாலகர்களை வழிபட்டு,உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி, வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது.
இக்கோயிலைச் சுற்றி மூன்று குளங்கள் இருப்பது விசேஷம்.இத்தலத்து தீர்த்தத்தை “நீலமலர் பொய்கை” என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியுள்ளார்.முன்னொரு காலத்தில் இத்தலம் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது.நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்யும் போது இப்போதுள்ள அமைப்பில் கோவிலை மாற்றிக் கட்டியதாக கூறப்படுகிறது.தீப்பந்தம் திரி நின்ற ஊர் ஆனதால் இத்தலம் திரிநின்றஊர் என்ற பெயர் பெற்று தற்போது மருவி திருநின்றியூர் என்று அழைக்கப்படுகிறது.