April 2, 2018 findmytemple.com
சுவாமி: ஆபத்சகாயர், பழனப்பிரான், பரமேஸ்வரன், அமுதலிங்கேஷ்வரர்.
அம்பாள்: பெரிய நாயகி, சிவசுந்தர கல்யாணி அம்மை.
மூர்த்தி: விநாயகர், வேணுகோபாலர், பைரவர், தக்ஷிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா.
தீர்த்தம்: மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்துவிட்டது), காவிரி தீர்த்தம், அமுத தீர்த்தம், முனிகுப்பம் தீர்த்தம், தேவதீர்த்தம்.
தலவிருட்சம் : கதலி (வாழை), வில்வம்.
தலச்சிறப்பு : தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும். ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் முதல் ஆதித்த மன்னராலும்,முதல் பராந்தக மன்னராலும் கட்டப்பட்டது.பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டுள்ளது. கொடிமரமில்லை, பலிபீடம் நந்தி உள்ளன.வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது.
முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாக அமைந்துள்ளது.விநாயகரை வணங்கி வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுப்பக்க பிரகாரத்தில் சப்த மாதர்கள்,விநாயகர்,வேணுகோபாலர் சன்னதிகளும்,சிவலிங்கங்கள்,நடராச சபை, பைரவர்,நவக்கிரகம் உள்ளது.
கோஷ்ட மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி,தெற்கே வீணாதர தக்ஷிணாமூர்த்தி,மேற்கில் அண்ணாமலையார்,வடக்கே பிரம்மா நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.அர்த்த மண்டபத்தில் தென்திசை நோக்கி அதிகார நந்தி கை கூப்பிய நிலையில்,உடைவாளுடன் காட்சியளிக்கிறார்.சுவாமி சன்னிதி பிரகாரத்தில் முருகன் இருக்க வேண்டிய இடத்தில் வேணுகோபாலர் குழலுடன் காட்சியளிப்பது சிறப்பு ஆகும்.நேரே மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் சுந்தர நாயகி அருள்பாலிக்கிறார்.அம்பாள் வெளிப்பிரகாரத்தில் ஈசனுக்கு இடப்பக்கமாக தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.
பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா இத்தல இறைவன் மீது படுகிறது.குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம். நந்திபெருமானுக்கு ஈசன் மணமுடிக்க எண்ணினார்.சிலாத முனிவரின் மகனான நந்திக்கு திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது.நந்தியும் ஈசனுடைய பிள்ளை போன்றவர் என்பதால் அவரை ஏழூர் ஊர்வலமாக அழைத்துவர ஈசன் விரும்பினார்.ஊர்வலம் திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,கண்டியூர், திருப்பூந்துருத்தி,தில்லைஸ்தானம் வழியாக மீண்டும் திருவையாற்றை வந்தடையும்.
திருமண தினத்தன்று சிவபெருமான் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளியிருக்க, நந்தி அவருடைய மனைவியுடன் இருக்க, ஏழூர் உற்சவமாகச் செல்வதுதான் சப்தஸ்தான விழாவின் ஐதீகம் ஆகும். இதில் ஏழு ஊருக்கும் பல்லக்கு தோள்களிலேயே சுமந்து செல்லப்படுகிறது.சித்திரா பௌர்ணமி அன்று “சப்தஸ்தான விழா” வெகு விமர்சையாக நடைபெறுகிறது.திருவையாற்றைச் சுற்றி அமைந்துள்ள ஏழு தலங்களில் (சப்தஸ்தான தலங்கள்) ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் இரண்டாவதாக அமைந்துள்ளது.இத்தலத்திற்கு திருப்பழனம், கதலிவனம், கெளசிகாஷ்ரமம், பிரயாணபுரி, பழனிப்பதி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.சந்திரன் வழிபட்ட தலம்.