November 14, 2018
சுவாமி : ஆம்ரவனேஸ்வரர்.
அம்பாள் : பாலாம்பிகை.
தீர்த்தம் : காவேரி.
தலவிருட்சம் : மாமரம்.
தலச்சிறப்பு :
திருவண்ணாமலையில் சிவனின் அடிமுடியை கண்டுவிட்டதாக பொய் கூறிய பிரம்மாவின் சாபத்தை நீக்கிய ஸ்தலம். மிருகண்டு முனிவர் கடுமையான தவம் செய்து உத்தம குணம் பொருந்திய புதல்வன் மார்கண்டேயனை பெற்ற இடம் மார்கண்டேயன் 16 வயது அடைந்ததும் மரண பயம் இல்லாமல் இருக்க தவம் செய்த ஸ்தலமாகும். மூலம் நட்சரத்திற்குரிய திருக்கோவில். மூல நட்சத்திரம் உடையவர்கள் அர்ச்சித்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி திருமணம் கைகூடும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு. மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் “மாந்துறை” என வழங்கப்படுகிறது.
திருத்தல வரலாறு முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரை தேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதி தேவியும் இங்கேயே தங்கினாள்.
நடைதிறப்பு : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
ஐப்பசியில் அன்னாபிஷேகம்,
திருக்கார்த்திகை தீபம்,
வைகாசியில் ஆதிசங்கரர் ஜெயந்தி.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில் முகவரி : அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்,லால்குடி தாலுகா, மாந்துறை – 621 703, திருச்சி மாவட்டம்.