November 2, 2018 findmytemple.com
சுவாமி : அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்), வயலாளி மணவாளன்.
அம்பாள் : பூர்ணவல்லி, அம்ருதகடவல்லி.
தீர்த்தம் : இலாட்சணி, புஷ்கரிணி.
தலவிருட்சம் : வில்வம்.
தலச்சிறப்பு :
இத்தலத்தை சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மன், மங்கைமடம் வீர நரசிம்மன். திருநகரி யோக நரசிம்மன் மற்றும் மற்றொரு நரசிம்ம தலமான ஹிரண்ய நரசிம்மன் ஆகிய தலங்களும் உள்ளன. இத்தலத்தில் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படுக்கிறது. திருமங்கையாழ்வார் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார். பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக இத்தலத்தில் தான் பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்தார். எனவே இத்தலம் பத்ரிக்கு இணையானது ஆகும். லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு “லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்” என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. இங்கே திருவாலியையும் தரிசிப்பதால் பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தில் ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறும்.
தல வரலாறு :
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் லட்சுமி தேவியை வேண்டினார்கள். இவர்களின் வேண்டுதலை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்தார். எனவே இவ்வூர் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) என்று அழைக்கப்படுகிறது. குலசேகர ஆழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த பகுதியில் (ஆலிநாடு) திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக திகழ்ந்தார். எனவே அவருக்கு “ஆலிநாடன்” என்ற பெயரும் ஏற்ப்பட்டது.
திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என்று லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி பூமியில் திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். திருமண வயது வந்ததும் லட்சுமி பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வந்துகொண்டிருக்கும் போது திருமங்கை மன்னன் பெருமாளை வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம்.
வழிபட்டோர் : திருமங்கை.
பாடியோர் : திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார்.
நடைதிறப்பு : காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
திருவிழாக்கள் : தை மாதம் கருட சேவை.
அருகிலுள்ள நகரம் : சீர்காழி.
கோவில் முகவரி : அருள்மிகு அழகியசிங்கர் கோயில்,திருவாலி திருநகரி – 609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.