சுவாமி : அப்பால ரெங்கநாதர் (அப்பக் குடத்தான்).
அம்பாள் : ஸ்ரீமத் கமலவல்லி தாயார், இந்திரா தேவி.
மூர்த்தி : விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்.
தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி.
தலவிருட்சம் : புரஷ மரம்.
தலச்சிறப்பு :
இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் 8 வது திருத்தலம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற பெருமாள் வாசம் செய்யும் திருத்தலங்கள் “திவ்ய தேசங்கள்” என்றும், “திருப்பதிகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. உபரிசிரவசுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு “அப்பக்குடத்தான்” என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலதுகையில் ஒரு அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம்.
பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். பெருமாளுக்கு முன்பே ஸ்ரீதேவி எழுந்தருளிய தலம், நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ள தலம், மார்க்கண்டேயனுக்கு பெருமாள் அருளிய தலம், எனப் பல பெருமைகளை உடைய திவ்ய தேசம், தற்போது “கோயிலடி” என அழைக்கப்படும் திருப்பேர் நகர் ஆகும்.
நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம் செய்துவிட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று நம்பப்படுகிறது. எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு “வைகுண்ட வாசம் நிச்சயம்” என்பது ஐதீகம். ஐந்து ஸ்ரீரங்கங்களுள் இதுவும் ஒன்று. அதாவது, பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச ரங்க தலங்களில் இது இரண்டாவது தலமாக விளங்கி வருகிறது. இந்த பஞ்ச ரங்க தலங்கள், உபய காவிரி மத்தியில் அமைந்துள்ளன. அதாவது, பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள தலங்களாகும்.
ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
அப்பால ரங்கம் – திருப்பேர்நகர் (கோவிலடி),
மத்திய ரங்கம் –ஸ்ரீரங்கம் (திருச்சி),
சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) – திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).
ஆகிய தலங்களை தரிசித்தால் 108 திருதலங்களை தரிசித்த பலன் உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை. “அப்பால ரங்கம்” என்பதற்கு இரு பொருள்படும். ஸ்ரீரங்கத்திற்கு அடியில் இருப்பதால் அப்பால என்றும், ஸ்ரீரங்கத்தைவிடத் தொன்மையானது என்பதால் காலத்தால் அப்பால் இருக்கும் பழமையானது என்று பொருள்படும் அப்பால என்ற வார்த்தை கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், “ஆதி ரங்கம்” என்னும் பொருள்பட “அப்பால ரங்கம்” என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
இத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் அப்பக் குடத்தான் என்னும் அப்பால ரங்கநாதர், புஜங்க சயனத்தில் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். திருமகள் கேள்வன் என்பதற்கிணங்க பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள். தசாவதார ஒட்டியாணம் அணிந்து அருகில் மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்திருக்க வலது கையால் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார் பெருமாள். தனி சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். இத்திருக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன் பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.
தல வரலாறு :
இத்தலத்திற்கு பெருமாள் எழுந்தருளுவதற்கு முன்பே திருமகள் எழுந்தருளினார். வைகுண்டத்தில் ஒருநாள் காரசாரமான பட்டிமன்றம் நடந்தது. விவாதத்தின் தலைப்பு “இரு தாயார்களில் பெருமை மிக்கவர் யார்? ஸ்ரீதேவியா? பூமி தேவியா?” என்பதே! அதன் முடிவு பூமி தேவிக்கு சாதகமாக அமைய, ஸ்ரீதேவி கோபித்துக் கொண்டு திருப்பேர் நகர் என்னும் கோயிலடிக்கு வந்து தவம் மேற்கொண்டார். அதனால் இவ்வூருக்கு “ஸ்ரீ நகர்” என்ற பெயர் ஏற்பட்டது. ஆழ்வார்கள் அதனை அழகு தமிழில் “திருப்பேர் நகர்” என்று அழைத்தனர். கோயிலடிக்கு பெருமாள் எழுந்தருளுவதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவிக்குக் காட்சியளித்த பெருமாள், “பூதேவியைவிட நீயே உயர்ந்தவள்” என்று ஆறுதல் கூறி, பிராட்டியை தன் திருமார்பில் சேர்த்துக் கொண்டார். பெருமாள் தன் மார்பில் ஸ்ரீதேவியை சூடிய தலம் இது. இங்கு வந்து வழிபட்டால் எல்லாச் செல்வங்களும் சேரும் என்பது ஐதீகம்.
உபரிசிரவசு என்பவன் பாண்டிய மன்னன். பெரும் பலசாலி, ஒரு நாள் வேட்டையாடச் சென்ற போது மதம் பிடித்த யானை ஒன்று கௌதமரின் ஆஸ்ரமத்தில் நுழைவதைப் பார்த்து, அதன் மீது அம்பெய்தான். மேலும் சீற்றமடைந்த அந்த யானை, வேதமோதிய வேதியன் ஒருவனைக் கொன்றது. இதனால் மன்னனுக்கு “பிரம்மஹத்தி தோஷம்” பிடித்தது. தன் பலமெல்லாம் இழந்து உடல் நலக்குறைவால் துன்பப்பட்டான்.
இதனால் தன் அரசைத் துறந்து புண்ணியத் தலங்களில் புனித நீராடச் சென்றான் பாண்டியன். “பலாச வனம்” என்று அழைக்கப்பட்ட புரசங்காடுகள் நிறைந்த கோயிலடிக்கு வந்தவுடன் தெய்வ அனுக்கிரஹம் கிடைத்தது போல உணர்வு ஏற்பட்டதால் இத்தலத்தின் விசேஷத்தைத் தனது குலகுருவிடம் கேட்டான் மன்னன். அதற்கு அவர், துர்வாசரின் சாபத்தால் அசுரர்களால் துரத்தப்பட்டு பதவியிழந்த இந்திரனை மீண்டும் தேவலோக அதிபதி ஆக்கப் பெருமாள் இங்கு அருளினார் என்று எடுத்துக் கூறினார், “சிறப்புமிக்க இத்தலத்தில் நீ தவம் செய்தால் உன் தோஷமும் விரைவில் நீங்கும்” என்று வழி காட்டினார். பலாச வனம் என்ற கோயிலடியில் உபரிசிரவசு மன்னன் தன் தோஷம் நீங்க தினசரி ஆயிரம் வேதியர்களுக்கு அன்னம் வழங்கி வந்தான். அதனால் அவன் மீது கருணை கொண்டார் பரந்தாமன்.
அதிகாலையிலேயே ஒரு பிராமணர் வந்துவிட்டார். மன்னனின் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பே, “பசிக்கிறதப்பா! எப்போது சாப்பாடு தயாராகும்?” எனப் புலம்பத் தொடங்கினார். மன்னன் விழித்தான். அவசர அவசரமாய் பூஜைகளை ஆரம்பித்து முடித்தான். பிராமணருக்கு உணவு பரிமாறச் சொன்னான். பிராமணர் ஒற்றை ஆளாக அத்தனை உணவையும் உண்டுவிட்டார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். பிராமணர் அரை வயிறே நிரம்பியதாக ஆர்ப்பரித்தார். மன்னன், “சற்றே பொறுத்தருள்க” மீண்டும் உணவு சமைத்து அர்ப்பணிக்கிறேன்’ என்றான். “மீண்டும் சமைக்கிறேன்” என்ற மன்னனிடம் வேதியர் உருவில் வந்த வேதத்தின் நாயகன் பதிலுரைத்தார். “அப்பனே! நான் சற்றே ஓய்வு எடுக்க வேண்டும், அந்தி சாய்ந்ததும் எனக்கு அப்பம் கொண்டு வா” என்று கூறினார். “அந்த அப்பங்களை ஒரு குடம் நிறையக் கொண்டு வா” என்றும் கூறிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றாராம் பெருமாள்.
அப்பம் தயார்! ஒரு குடம் முழுக்க அப்பம் நிரப்பப்பட்டு அந்தணராக வந்த பெருமாளின் அருகில் வைக்கப்பட்டது. அதில் ஒன்றைத் தின்று விட்டு மன்னனைப் பார்த்துச் சிரித்தார் பிராமணர். மன்னன் ஏதோ பரவசமாக உணர, பிராமணர் உடனே பெருமாளாக மாறி மன்னன் உபரிசிரவசுக்கு காட்சி தந்தார். அப்போது தவமிருந்த ஸ்ரீதேவி தாயாரும் மன்னனுக்குத் திருவருள் புரிந்தாள். அப்பத்தை விரும்பிக் கேட்டுத் தின்றதால், அன்று முதல் இந்தப் பெருமாளுக்கு “அப்பக் குடத்தான்” என்ற வித்தியாசமான திருநாமம் ஏற்பட்டது. இன்றைக்கும் இரவு வேளையில் அப்பால ரங்கநாதருக்கு அப்பம்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.
வழிபட்டோர் : இந்திரன், உபரிசிரவசு மன்னன்.
பாடியோர் : 33 பாசுரம் பாடிய தலம். நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடிய தலம்.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.
திருவிழாக்கள் :
பங்குனி உத்திரத்தில் தேர்,
தீர்த்தவாரி,
வைகுண்ட ஏகாதசி,
நவராத்திரி,
கிருஷ்ணனுக்கு உறியடி உற்சவம்.
கோயில் முகவரி : அருள்மிகு அப்பால ரெங்கநாத சுவாமி திருக்கோவில்,கோவிலடி – 613 105, திருப்பேர் நகர், தஞ்சாவூர்.
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர் விருது