• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோவில்

May 6, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு அருணஜடேசுவர சுவாமி (தாலவனேஸ்வரர், செஞ்சடையப்பர், ஜடாதரர்).

அம்பாள் : அருள்மிகு பெரிய நாயகி.

மூர்த்தி : சொக்கநாதர், நர்த்தன விநாயகர், முருகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், பஞ்சபூத லிங்கங்கள், பைரவர், சூரியர், சந்திரர், சப்தகன்னியர், குங்கிலியக் கலயர்.

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம்.

தலவிருட்சம் : பனை.

தலச்சிறப்பு : இத்தலத்திற்குத் தாடகையீஸ்வரம் என்று பெயர். இத்தலத்தில் தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது மேலாடை நெகிழ அதனை இருமுழங்கைகளாலும் பற்றிக் கொண்டு மாலை சாத்த முடியாமல் வருந்த, அவளுக்கு இரங்கி பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அன்று முதல் லிங்கம் சாய்வாகவே இருந்தது. அரசன் சாய்ந்த லிங்கத்தினை நிமிர்த்த யானை கொண்டு முயற்சித்தும் இயலவில்லை. குங்கிலியக் கலயநாயனார் தன் கழுத்தில் கயிறு கட்டி இழுக்க, சிவலிங்கம் நேரானது. இவ்வூரில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் உள்ளது.

தல வரலாறு : முன்காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர்? என்றப் போட்டி எழுந்தது. அப்போது சிவபெருமான், ‘எனது அடி முடியை யார் அறிகிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று கூறினார். ஈசனின் அடிமுடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் புறப்பட்டனர். இருவராலும் சிவபெருமானின் சிரசையோ, பாதத்தையோ காண முடியவில்லை. லிங்கோத்பவராய் திருவண்ணாமலையில் தனது அடி முடி தெரியா வண்ணம் சிவராத்திரிப் பொழுதில் நள்ளிரவு 12.00 மணி அளவில் ஜோதி வடிவில் காட்சியளித்தார் சிவபெருமான். அதுவே லிங்கோத்பவ காலம் (இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை) எனப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், இந்த லிங்கோத்பவர் காலத்தில் கண்டிப்பாக சிவாலயங்களில் வழிபாடு செய்ய வேண்டும்.

மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மதேவர், தாழம்பூவை பொய் சாட்சி கூறவைத்து பொய்யுரைத்தார். இதனால் கோபமுற்ற ஈசன், பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும், தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்றும் சபித்தார். பிரம்மதேவர் தன் தவறை உணர்ந்து ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். ‘பொய் சொன்ன பெரும் சாபம் தொலைய வேண்டும் என்றால் திருப்பனந்தாள் சென்று, அத்தல பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்’ என்று வழி கூறினார். பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்றக் குற்றங்களும் அவரை விட்டு அகன்றன.

அகமகிழ்ந்த பிரம்மதேவர், இத்தல அருணஜடேஸ்வரருக்கு, சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தி இன்புற்றார். இன்னும் ஒவ்வொரு வருடமும் இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவை பிரம்ம தேவரே முன்னின்று நடத்துவதாக ஐதீகம் கூறப்படுகிறது. பிரம்மதேவர் நீராடி சாப விமோசனம் பெற்ற பொய்கை தீர்த்தம், தற்போது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் ‘பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி’ பொய்கைக் குளத்தில் நடக்கிறது. தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதற்கும் பாவம் உண்டானது. திருப்பனந்தாளில் ஈசன் தாழம்பூவுக்கும் சாப விமோசனம் கொடுத்தார்.

சிவராத்திரியின் மூன்றாம் ஜாம பூஜையில் மட்டும் ஏற்றுக்கொள்வதாக சிவபெருமான், தாழம்பூவுக்கு விமோசனம் அளித்தார். இத்தலத்தில் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கலாம். இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார். இங்கு வழிபட்டால் சந்திர தோஷங்கள் அகலும். இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தல மரமாக பனை உள்ளது. பிரகாரத்தில் இரண்டு ஆண் பனை மரங்கள் உள்ளன.

வழிபட்டோர் : பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியர், சந்திரர், ஆதிகேசன், நாககன்னி, தாடகை, குங்குலியக் கலயநாயனார்.

பாடியோர் : திருஞானசம்பந்தர்.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறுகால பூஜை.

திருவிழாக்கள் : சித்திரை திருக்கல்யாணம், ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோவில்,திருப்பனந்தாள் அஞ்சல் – 612 504, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க