February 13, 2017 findmytemple.com
சுவாமி : அருள்மிகு தேனுபுரீசுவரர்.
அம்பாள் : அருள்மிகு ஞானாம்பிகை.
மூர்த்தி : முருகன், இராமர், மதவாரணப்பிள்ளையார், சப்த கன்னியர், துர்க்கை, மகாலிங்கம், சம்பந்தர், பைரவர்.
தீர்த்தம் : ஞான தீர்த்தம்.
தலவிருட்சம் : வன்னி மரம்.
தலச்சிறப்பு :
இங்கு உள்ள துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தது ஆகும். பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம். விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது. வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடி தீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது. மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.
இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியில் இருந்து விலகியே உள்ளன. திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களில் உள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும் போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம் பெருமானை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்பு உடையது. வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
தலவரலாறு :
சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டு வந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர். துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்ம வாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும். ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்ம வாகனம் இடப்புறம் நோக்கி அமைந்து உள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.
வழிபட்டோர் : விசுவாமித்திரர், மார்கண்டேயர்.
பாடியோர் : திருஞானசம்பந்தர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.௦௦ மணி வரை.
பூஜை விவரம் : 6 கால பூஜை.
திருவிழாக்கள் :
ஆனி – முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப் பந்தல் பெற்ற திருவிழா.
ஆடி – வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு.
மார்கழி – அமாவாசை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோவில்,பட்டீஸ்வரம் அஞ்சல் – 612 703, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.