March 25, 2016 வெங்கி சதீஷ்
உலகளவில் குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் லெபனான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டும் இன்னமும் குழந்தை திருமணத்தைத் தடுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்துவதில் மேத்தனப்போக்கே காட்டப்படுகிறது. இந்நிலையில் அங்கு உள்ள முக்கிய சாலையின் ஓரத்தில் சுமார் 67 வயதான ஒருவர் 12 வயதான குழந்தையுடன் திருமண உடையில் நின்றுகொண்டு இருந்தார்.
அதை ஒரு போட்டோகிராபர் வித விதமாகப் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருசிலர் கண்டும் காணாமல் சென்றாலும் பலர் அந்த முதியவரிடம் சென்றும் போட்டோகிராபரிடம் சென்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பெண்ணை பலர் இவர் யார் எனக் கேட்டபோது இவர் எனது கணவர் எனக் கூறினார். அதற்கு பெண்கள் பலர் யாருக்கும் பயப்படாதே கட்டாயப்படுத்தினால் என்னிடம் சொல் நான் பார்த்துக்கொள்கிறேன் எனத் தைரியம் கூறினர். பின்னர் அந்த இடமே ஒரு சந்தை கடைபோல் கூட்டம் கூடி வயதானவரைத் திட்டி தீர்த்தனர்.
பின்னர் தான் தெரிந்தது அது ஒரு தொண்டு நிறுவனத்தால் விழிப்புணர்விற்காக நடத்தப்பட்ட நாடகம் எனத் தெரியவந்தது. இது குறித்து அவர்கள் கூறும்போது, நாட்டில் குழந்தை திருமணத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற நாடகம் நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தனர். ஆனாலும் தற்போது முதலில் இருந்ததை விட விழிப்புணர்வு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தனர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.